டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மீது பொதுமக்கள் மனுக் கேட்பு நிகழ்ச்சியின்போது குஜராத்தைச் சேர்ந்த ராஜேஷ் கிம்ஜி என்பவர் கொடூரமாகத் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை நடந்த இந்தத் தாக்குதலில், ராஜேஷ் முதலமைச்சரை பலமுறை கன்னத்தில் அறைந்து, முடியைப் பிடித்து இழுத்து, தள்ளி, காயப்படுத்த முயன்றதாகத் தகவல். சுமார் 80 வினாடிகள் (1.20 நிமிடங்கள்) இந்தத் தாக்குதல் நீடித்தது.
பாதுகாப்பு பணியாளர்கள் அவரைப் பிடிக்க முயன்றபோதும், ராஜேஷ் தொடர்ந்து ஆக்ரோஷமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. முதலமைச்சரின் கை, தோள்பட்டை, தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, மருத்துவப் பரிசோதனை (எம்எல்சி) நடைபெற்று வருவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் பிரவேஷ் வர்மா தெரிவித்தார்.
ராஜேஷ் கிம்ஜி, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்தவர். இவர் 24 மணி நேரமாக முதலமைச்சரின் இயக்கங்களை உளவு பார்த்ததாகவும், அவரது ஷாலிமார் வீடு வரை சென்று ஆய்வு செய்ததாகவும் அமைச்சர் பிரவேஷ் வர்மா கூறினார். சிவில் லைன்ஸ் பகுதியில் இரவைக் கழித்த ராஜேஷ், முதலமைச்சரைச் சந்தித்தவுடன் தாக்குதலைத் தொடங்கினார்.
இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் அரசியல் சதியா? அல்லது தனிப்பட்ட காரணமா? என்பது குறித்து டெல்லி மற்றும் குஜராத் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. ராஜேஷ் விலங்கு பிரியர் எனவும், சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பு (நாய்கள் தொடர்பானது) காரணமாக ஆத்திரமடைந்திருக்கலாம் எனவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
மற்றொரு கோணத்தில், அவரது உறவினர் சிறையில் இருப்பது தொடர்பாகவும் கோபமடைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆனால், காவல்துறையின் அதிகாரப்பூர்வ அறிக்கை இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், முதலமைச்சர் ரேகா குப்தாவின் மனோதிடம் குறையவில்லை என்றும், தனது மக்கள் பணியைத் தொடருவார் என்றும் அமைச்சர் பிரவேஷ் வர்மா உறுதியளித்தார்.
