மேற்கு வங்க மாநிலம் மால்டங்கா கிராமத்தை சேர்ந்த கார்த்திக் ராயின் மனைவி 10 கி.மீ தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு கட்டிலில் கொண்டு செல்லப்பட்டபோது உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாசம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கார்த்திக் ராய் தனது மனைவிக்கு உடல்நிலை மோசமானதால் ஆம்புலன்ஸ்க்கு 10 முறைக்கு மேல் அழைப்பு விடுத்தும் ஆம்புலன்ஸ் சரியான நேரத்தில் வரத் தவறியதால், அவரது குடும்பத்தினர் பாதிக்கப்பட்டவரை கட்டிலில் தூக்கிக்கொண்டு நடந்தே கடினமான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டனர்.

இதயத்தை உலுக்கும் இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இருந்திருந்தால், தன் மனைவியின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும் என்ற ஆணித்தரமான நம்பிக்கையை வெளிப்படுத்தி, சாலை வசதியின்மை குறித்து கண்ணீர் மல்க கார்த்திக் ராய் புலம்பினார். கிராமப்புறங்களில் மேம்பட்ட சுகாதார வசதியை உடனடியாக மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை இந்த செய்தி உணர்த்துவதாக வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இதுகுறித்த  தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.