தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நாளை நடைபெறவிருந்த நிலையில் தற்போது அதன் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதாவது வருடம் தோறும் ஆசிரியர்களுக்கு பொது கலந்தாய்வு மாறுதல் நடைபெறும் நிலையில் நடப்பாண்டிலும் பொது கலந்தாய்வு மாறுதல் தேதி அறிவிக்கப்பட்டது. நாளை உபரி பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெற இருந்த நிலையில் உபரி பட்டதாரி ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

இதில் முதுகலை பட்டதாரிகள் பலர் இடம்பெற்றிருந்ததோடு போதிய பாட வேலைகள் இல்லாத முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 10 மற்றும் அதற்கு கீழ் உள்ள வகுப்புகளில் பாடம் நடத்த அனுமதிக்கப்பட்டனர். இவர்களையும் உபரி ஆசிரியர்களாக சேர்த்து கணக்கிட்டுள்ளனர். இது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். அதோடு பழைய நடைமுறை வேண்டும் எனவும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை அதற்கு கீழ் உள்ள வகுப்புகளில் பாடம் நடத்த அனுமதிக்க கூடாது எனவும் பள்ளி கல்வித்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் இதை கருத்தில் கொண்டு நாளை நடைபெறவிருந்த உபரி பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.