இந்தியா முழுவதும் இளங்கலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான CUET-UG நுழைவுத் தேர்வு இன்று நடத்தப்பட்ட நிலையில், நாடு முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தேர்வு தொடங்குவதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தேர்வினை முன்னின்று நடத்தும் டிசிஎஸ் (TCS) நிறுவனம், தங்கள் தரப்பில் ஏற்பட்ட எதிர்பாராத தொழில்நுட்பக் காரணங்களால் தான் CUET-UG தேர்வு தாமதமானதாகப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளது.

இதனால் தேர்வு மையங்களுக்குச் சென்ற லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் அவதிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகினர். இதனையடுத்து, தொழில்நுட்பக் கோளாறுகள் தற்பொழுது முழுமையாகச் சரி செய்யப்பட்டு, தேர்வுகள் மீண்டும் சுமுகமாக நடத்தப்பட்டு வருவதாகத் தேசிய தேர்வு முகமை (NTA) அவசரத் தகவல் வெளியிட்டுள்ளது. ​இந்தத் திடீர் குளறுபடியைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் நடைபெறவிருந்த CUET-UG தேர்வின் நேரத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

அதன்படி, பிற்பகல் 3 மணிக்குத் தொடங்க வேண்டிய தேர்வு, ஒரு மணி நேரம் தாமதமாக மாலை 4 மணிக்குத் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு எழுதுவதில் ஏதேனும் சிக்கல்களைச் சந்திக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உடனடி உதவிகளைப் பெற ஏதுவாக, +9111 40759000 என்ற உதவி எண்ணையும், [email protected] என்ற அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரியையும் தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.