ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆல்வார் ரயில் நிலையம் அருகே கடந்த புதன்கிழமை ஒரு வினோதமான விபத்து நடந்துள்ளது. அதாவது அதிவேக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அவ்வழியே சென்று கொண்டிருந்தபோது பசு மாடு ஒன்று ரயில் மீது மோதியுள்ளது. ரயில் மோதியதில் சுமார் 30 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட பசு மாடு தண்டவாளத்தின் அருகே சிறுநீர் கழித்துக் கொண்டிருந்த முதியவர் ஷிவ்தயாள் என்பவர் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

ரயிலில் அடிபட்ட பசுமாடும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் இந்தியாவில் அதிவேக ரயில் சேவையை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசால் வந்தே பாரத் ரயில் சேவை கொண்டுவரப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகிறது. இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டதிலிருந்து அடிக்கடி  மாடுகள் ரயில் மீது மோதி விபத்து ஏற்படும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தற்போதும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மாடு மோதியதில் மாடு மற்றும் முதியவர் இருவரும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.