கேரள மாநிலத்தில் உள்ள அரிக்குளம் என்ற பகுதியில் கோரோத் முகமது அலி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் அகமது ஹாசன் ரிஃபாய் (12). இந்த சிறுவன் கடந்த ஞாயிற்றுக் கிழமை வீட்டில் இருந்த ஐஸ்கிரீமை எடுத்து சாப்பிட திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே பெற்றோர் சிறுவனை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

அதன் பிறகு பிரேத பரிசோதனைக்காக சிறுவனின் உடல் கோழிக்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பிரேத பரிசோதனையின் போது சிறுவனின் உடலில் அமோனியம் பாஸ்பரஸ் என்ற விஷம் கலந்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையின் போது முகமது அலியின் சகோதரி தாஹிரா என்பவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். இதனால் போலீசாருக்கு சந்தேகம் வலுக்கவே தாஹிராவிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது முகமது அலியின் மனைவிக்கும் தாஹிராவுக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை நடந்து வந்ததால்அவரை கொலை செய்யதாக முடிவு செய்து ஐஸ்கிரீம் வாங்கி அதில் விஷத்தை கலந்து யாருக்கும் தெரியாமல் முகமது அலி வீட்டில் தாஹிரா வைத்து விட்டு வந்துள்ளார். அப்போது சிறுவன் எதிர்பாராத விதமாக ஐஸ்கிரீமை எடுத்து சாப்பிட்டதால் பரிதாபமாக உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தற்போது போலீசார் தாஹிராவை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.