இறைவனை வழிபடுவதற்கு என்று சில வழக்கங்கள் உள்ளது. இதில் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக தீ மிதித்தால், முடி காணிக்கை, எடைக்கு எடை துலாபாரம் போன்ற பல வழிபாடுகள் உள்ளது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் முழுக்காதான் குலத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் அம்மனை குழிக்குள் வைத்து வழிபடுவதால், இந்த அம்மனின் பெயர் ‘மூடி அம்மன்’ என்று கூறப்படுகிறது. இது குறித்து முழுக்காதான் குலத்தைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது, எங்கள் வீட்டின் பிள்ளைகளின் காதணி விழாவுக்கு 3 நாட்களுக்கு முன்பாக மூடி அம்மனை வழிபடுவது வழக்கம்.

காதணி விழாவில் உள்ள குடும்பத்தினர் அம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் செய்து, பூ, பழம், தேங்காய், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றுடன் பொங்கல் வைத்து குடும்பத்துடன் வழிபடுவர். அதன் பின் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டு, வழக்கம்போல் குழி மூடப்படும். இது அம்மனிடம் உத்தரவு கேட்கப்படும் நிகழ்வாகும். இது போன்று அம்மனிடம் உத்தரவு கேட்டு குடும்ப விழாக்கள் செய்தால் அவை எந்த ஒரு இடர்பாடும் இல்லாமல் நல்லபடியாக நடக்கும் என்று நம்பிக்கை. இது காலம் காலமாக நடைபெற்று வருகிறது. மூடி  அம்மனை வழிபட்ட பிறகு, நவதானியங்களை வைத்து வழிபாடு செய்து அந்த குழியை மூடி விடுவார்கள். பின்னர் ஏதேனும் குடும்ப நிகழ்ச்சி இருந்தால்  மீண்டும் வழிபாடு நடக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.