கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சேந்தநாடு கிராமத்தில் கிருஷ்ணா தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வைதேகி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். நேற்று கிருஷ்ண தாஸ் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தன் மீதும், தனது மனைவி, குழந்தைகள் மீதும் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் கூறியதாவது, புதுச்சேரியைச் சேர்ந்த வள்ளி என்பவர் சேந்தநாடு கிராமத்தில் தள்ளு வண்டியில் இட்லி கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். அவர் பலரிடம் கடன் வாங்கி அந்த பணத்தை கொடுக்காமல் இருந்தார்.

இதேபோல கிருஷ்ணதாஸின் நண்பர் சுரேஷிடம் தனது வீட்டை அடமானம் வைத்து வள்ளி பணம் வாங்கியுள்ளார். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் பணத்தை கொடுக்க முடியாததால் அந்த வீட்டை சுரேஷின் பெயரில் கிரையம் செய்து கொடுத்தார். அதற்கு சுரேஷின் நண்பரான கிருஷ்ணதாஸ் சாட்சி கையெழுத்து போட்டுள்ளார். இதனையடுத்து வெளியூருக்கு சென்று வள்ளி தலைமறைவானார்.

இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் கிருஷ்ணதாஸின் வீட்டிற்கு சென்று அவரை திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் கிருஷ்ணதாஸ் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இன்று சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.