உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் பகுதியில், வெள்ளிக்கொலுசு தொழிற்சாலை உரிமையாளர் வினய் (24) மற்றும் அவரது மனைவி டோலி (21) மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

தம்பதியர் உயிரிழந்த அறையில் அவர்களது பிறந்து 20 நாட்களே ஆன குழந்தை அழுது கொண்டிருந்தது. இந்த பரிதாபகரமான காட்சியை போலீசார் கண்டதும் உடனடியாக விசாரணை தொடங்கப்பட்டது.

தொழிலதிபர் வினய், இறப்பதற்கு முன் தனது மைத்துனருக்கு ஒரு வாட்ஸ்அப் ஆடியோ கிளிப் அனுப்பியுள்ளார். அதில், “நாங்கள் ஏதோ சாப்பிட்டுவிட்டோம்… அதில் எதோ கலக்கப்பட்டிருக்கும் போலிருக்கு… சீக்கிரம் வா” என கூறியிருந்தார்.

இதன் அடிப்படையில், போலீசார் அறையில் இருந்து சப்பிடப்பட்ட பாதி லட்டுவை மீட்டு, தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். விஷம் கலந்த உணவு கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், டோலியின் குடும்பத்தினர், வினயின் குடும்பத்தினர் கொலை செய்து இருக்கலாம் என்று குற்றம் சாட்டியுள்ளனர். வினயின் சகோதரர்கள் தொழிற்சாலை உரிமையை கைப்பற்ற திட்டமிட்டிருந்ததாகவும், கடந்த சில நாட்களாக வினய் மற்றும் டோலியை கொடுமை செய்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தம்பதியர் இருவரும் விஷம் கலந்த லட்டு சாப்பிட்டதன் பின்னர் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் நம்புகிறார்கள்.

ஆனால் உண்மையில் இது தற்கொலையா அல்லது நஞ்சூட்டப்பட்ட கொலையா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. வினயின் குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.