தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இந்தியாவின் முதல் பார்முலா இரேஸ் பந்தயம் நடக்கிறது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா, சச்சின் டெண்டுல்கர் மற்றும் நடிகர் ராம்சரண் போன்றோர் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது நடிகர் ராம்சரண் ஆனந்த் மகேந்திராவுக்கு நாட்டுக் கூத்து பாடலுக்கு எப்படி ஸ்டெப் போட வேண்டும் என கற்றுக் கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோவை ஆனந்த் மஹிந்திரா தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்து அந்தப் பந்தயத்தை தவிர்த்து எனக்கு கிடைத்த உண்மையான போனஸ் என்னவென்றால் நாட்டுக் கூத்து பாடலுக்கு எப்படி ஸ்டெப் போடுவது என்பதுதான். இதை நான் நடிகர் ராம்சரணிடம் இருந்து கற்றுக் கொண்டேன்.

அவருக்கு என்னுடைய இனிய நன்றி மற்றும் ஆஸ்கர் விருது பெறுவதற்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்து ராம் சரணும் ஒரு  பதிவை போட்டுள்ளார். அதில் ஜீ நீங்கள் என்னை விட வேகமாக ஸ்டெப் கற்று கொண்டீர்கள். உங்களுடன் உரையாடிய தருணம் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று பதிவிட்டுள்ளார். மேலும் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகியோர் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்து பாடலுக்கு சர்வதேச கோல்டன் க்ளோப் விருது கிடைத்ததோடு ஆஸ்கர் விருதுக்கும் தேர்வாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.