அமெரிக்கா மற்றும் கனடாவின் பல பகுதிகளில் வானில் வண்ணமயமான ஒளிகள் சுழன்றடித்துக்கொண்டிருந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி, மக்கள் மத்தியில் அதிர்ச்சியும் ஆர்வமும் ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில் அமைதியாக பரவிய இந்த ஒளிப்படலங்கள், வானில் மெதுவாக நகரும் வகையில் பல இடங்களில் பதிவாகியுள்ளன.

சுமார் 22 விநாடிகள் கொண்ட இந்த வீடியோ, X பிளாட்பாமில் @dom_lucre என்ற கணக்கில் பகிரப்பட்டு 1.6 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. இந்த வீடியோ குறித்து சமூக வலைதளங்களில் பயனர்கள் பல வித்தியாசமான கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். சிலர் இது உண்மையான ஏலியன் தொடர்பான UFO காட்சி என நம்புகின்றனர், மற்றவர்கள் இவற்றை செயற்கை நுண்ணறிவு (AI) உருவாக்கிய வீடியோ என கூறுகின்றனர்.

 

“ஏலியன்கள் மறைவாக வர விரும்பினால், அவர்களது கப்பலில் ஏன் விளக்குகள் இருப்பது?” என ஒருவர் கேள்வி எழுப்ப, “இந்த ஒளிகள் எல்லாம் Alibaba-வில் வாங்கிய RGB விளக்குகளா?” என மற்றொருவர் நக்கல் செய்துள்ளார். இந்த வீடியோவில் பயன்படுத்தப்பட்ட பின்னணி இசை கூட இதை நம்ப வைக்கும் வகையில் இருந்தது என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனினும், இது உண்மையா, செயற்கையாக உருவாக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் இல்லை. இருப்பினும், இதுபோன்ற மர்ம ஒளி வீடியோக்கள் மீண்டும் மீண்டும் வெளிவருவது மக்கள் மத்தியில் ‘ஏலியன்கள் உண்மையா?’ என்ற கேள்விக்கு பதில்கள் தேடும் ஆர்வத்தை தொடர்ந்து தூண்டிக்கொண்டிருக்கிறது.