கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் சுகுணாபுரம் பகுதியில் கிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் கலை, அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு கல்லூரி மாணவர்கள் தங்கி படிக்கும் வசதியாக விடுதி இருக்கிறது. அதன் அருகில் இருக்கும் 5 அடி உயரமுள்ள சுற்றுச்சுவர் பல ஆண்டுகள் முன்பு கருங்கற்களால் கட்டப்பட்டதாகும். இந்நிலையில் சுற்றுச்சுவர் வலுவிழந்ததால் அதன் அருகிலேயே 5 அடி தூரத்தில் கான்கிரீட் சுவர் அமைக்க முடிவு செய்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தொடங்கியது. இதற்காக பழைய சுற்றுச்சுவரை ஒட்டி அஸ்திவாரத்திற்காக 5 அடி ஆழத்தில் குளி தோண்டி கட்டுமான பணிகள் நடந்து வந்தது. இந்த பணியில் ஆந்திராவைச் சேர்ந்த 3 பேர், மேற்குவங்கத்தைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 5 தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

நேற்று மாலை கருங்கல்லால் ஆன பழைய சுற்றுச்சுவர் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்ததால் 5 தொழிலாளர்களும் இடுப்பாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜெகநாதன்(53), நக்கிலா சத்யம்(48), ரப்பாகா கண்ணையா(49), மேற்குவங்கத்தைச் சேர்ந்த பிஸ்கோஷ்(40), பருன் கோஸ்(35) ஆகியோரை மீட்டனர்.

இதில் படுகாயமடைந்த பருன் கோஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மற்ற நான்கு பேரும் இறந்துவிட்டனர். இறந்தவர்களின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே சிகிச்சை பலனின்றி பருன் கோஷும் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.