கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வேலாண்டிபாளையத்தில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யசோதா(62) என்ற மனைவி உள்ளார். இவர் சாய்பாபா காலனி நிற்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு யசோதாவின் சேமிப்பு கணக்கில் 831 ரூபாய், பிக்சட் டெபாசிட் கணக்கில் 1 லட்சத்து 44 ஆயிரம் இருந்தது. அதே ஆண்டு மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வாடிக்கையாளர் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு பராமரிக்கவில்லை என கூறி ஒரு மாதத்திற்கும் 50 முதல் 60 ரூபாய் வரை அபராதம் விதித்து சேமிப்பு கணக்கிலிருந்து வங்கி பணத்தை பிடித்தம் செய்தது.

இதுகுறித்து வாடிக்கையாளர் கேட்டபோது கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் அபராதமாக பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வங்கி மீண்டும் அவரது கணக்கில் வரவு வைத்தது. ஆனால் 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வங்கி பிடித்தம் செய்த அபராத தொகையை திரும்ப வழங்கவில்லை. இதுகுறித்து தனது கணவர் மூலமாக யசோதா நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் சேமிப்பு கணக்கில் இருந்து வங்கி எடுத்துக் கொண்ட 34.50 ரூபாய் வாடிக்கையாளருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக 34,500 ரூபாய் ஆகியவற்றை நான்கு வாரங்களுக்குள் வங்கி வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.