கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேட்டில் கிருஷ்ணசாமி(71) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017- ஆம் ஆண்டு கிருஷ்ணசாமி கோயம்புத்தூரில் இருக்கும் தனியார் கண் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார். அங்கு கிருஷ்ணசாமியின் கண்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்தனர். முன்னதாக ரத்தம், சிறுநீர் உள்ளிட்ட பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பரிசோதனை முடிவில் கிருஷ்ணசாமிக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த கிருஷ்ணசாமி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், மற்றொரு தனியார் மருத்துவமனையிலும் பரிசோதனை செய்து பார்த்துள்ளார். அதன் முடிவில் எய்ட்ஸ் நோய் இல்லை என்று மருத்துவ அறிக்கையில் தெரியவந்தது. இதனால் மன உளைச்சலில் கிருஷ்ணசாமி கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் தனியார் கண் மருத்துவமனை மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி டாக்டர் ராமராஜ் தனியார் கண் மருத்துவமனையில் அலட்சியமான சேவையை சுட்டிக்காட்டி இழப்பீடாக 5 லட்ச ரூபாய் பணத்தை 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.