கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் பகுதியில் யுஜின் சஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவில் கே.பி சாலையில் இருக்கும் சுற்றுலா நிறுவனத்திடம் 17 பேர் அடங்கிய ஒரு குழுவாக திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூர் வழியாக புனே செல்வதற்கு விமான டிக்கெட் பதிவு செய்துள்ளார். இதனையடுத்து நேரமின்மை காரணமாக அந்த குழுவினரால் புனே செல்லும் விமானத்தை பிடிக்க இயலவில்லை.

இதனால் மீண்டும் கட்டணம் செலுத்தி புதிய பயணச்சீட்டு பெற்று வேறு விமானம் மூலம் அவர்கள் புனேவுக்கு சென்றனர். இந்நிலையில் தாங்கள் பயணம் செய்யாத விமான கட்டணத்தை திரும்பி தருமாறு சம்பந்தப்பட்டவர்கள் சுற்றுலா நிறுவனத்திடம் கேட்டனர். ஆனாலும் சுற்றுலா நிறுவனத்தினர் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. இதனால் யுஜின் உட்பட 17 பேர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கினை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணிய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் சுற்றுலா நிறுவனத்தின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி பயணம் செய்யாத விமான கட்டணம் 60 ஆயிரம் ரூபாய், நஷ்ட ஈடு 17 ஆயிரம் ரூபாய், வழக்கு செலவு தொகை 5 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.