மும்பையை சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் 1-ம் வகுப்பு படித்து வந்த போது கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சமோசா வாங்குவதற்காக பள்ளிக்கு அருகே அமைந்துள்ள கடைக்கு சென்றார். அங்கு சிறுமி தனியாக வந்ததை அறிந்து கொண்ட 45 வயது நபர் அவளிடம் பேச்சு கொடுத்தார். அப்போது சாக்லேட் வாங்கி தருவதாக கூறி சிறுமியை மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பின்னர் அந்த சிறுமியை அங்கேயே  விட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டார். அந்த வழியாக வந்த 2 பெண்கள் சிறுமி அழுது கொண்டிருந்ததை கவனித்தனர். அவர்கள் சிறுமியின் தாயிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உடனடியாக வரும்படி கூறினர். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த தாயிடம் சிறுமி நடந்ததை கூறி அழுதார். உடனடியாக சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் அந்த நபர் அடையாளம் காணப்பட்டு உடனடியாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு 2 வருடங்களாக நடந்து வந்த நிலையில் தற்போது விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.