ஒடிசாவின் பவுத் மாவட்டம் தாலுபலி பகுதியில், இரண்டு சிறுவர்கள் ரயில் பாதையில் சாகசம் செய்த பரபரப்பு சம்பவம் ஒன்று சமீபத்தில் வெளியாகி, சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. கடந்த ஜூன் 29ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தில், 12 வயது சிறுவன் ஒருவர் ரயில் பாதையின் நடுவில் படுத்துக்கொண்டார்.

அப்போது அதே வழியில் ரயில் ஓடி சென்றது. இந்த ஆபத்தான செயலை அவரது 15 வயது நண்பன் மொபைலில் வீடியோ எடுத்தார். மேலும், மூன்றாவது சிறுவன் ஒருவர் தண்டவாளத்தின் அருகில் நின்று பார்த்ததோடு, சாகசத்தில் பங்கேற்கவில்லை என தெரியவந்தது.

அந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) உடனடியாக விசாரணை நடத்தினர். சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு சென்ற அதிகாரிகள், சிறுவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் நேரில் சந்தித்து, இந்தச் செயல் எவ்வளவு ஆபத்தானது என்பதை விளக்கினர்.

ரயில்வே இன்ஸ்பெக்டர் கூறுகையில், “சிறுவர்களுக்கு எந்த உடல் பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், இது உயிருக்கு மிகுந்த ஆபத்தான செயல்” என எச்சரித்தார். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காத வகையில், அந்தக் கிராமத்தில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த இரு சிறுவர்களும் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம், கடந்த ஜூன் 20ஆம் தேதி பவுத்–பூர்ணகடகா இடையிலான புதிய ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிய பின்னர், ரயில் பாதையில் பாதுகாப்பு குறித்து மீண்டும் விவாதங்களை எழுப்பியுள்ளது. கிழக்கு கடற்கரை ரயில்வே வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், “ரயில் பாதை விளையாட்டு மைதானம் அல்ல.

ஒரு சிறிய அலட்சியமே உயிரை பறிக்கக்கூடியது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிராமப்புற மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ரயில்வே விதிகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.