தமிழகத்தில் கள ஆய்வின் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதில் முதல் கட்டமாக கடந்த பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கள ஆய்வை மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கள ஆய்வை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டார். அந்த மாவட்டங்களில் நடக்கும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்துவிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி பல உத்தரவுகளை பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து வருகின்ற மார்ச் 5ஆம் தேதி திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம்,சிவகங்கை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களின் கள ஆய்வுக்காக முதல்வர் ஸ்டாலின் மதுரை செல்கிறார்.

இது குறித்து மாநகராட்சி நிர்வாகம், பள்ளிக்கல்வி, ஊரக வளர்ச்சி,மக்கள் நல்வாழ்வு மற்றும் வேளாண்மை உள்ளிட்ட பல முக்கிய துறைகளின் செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். அந்த ஐந்து மாவட்ட அதிகாரிகளுடன் அவர்கள் கள ஆய்வை மேற்கொள்ள வேண்டும் எனவும் மார்ச் ஆறாம் தேதி மதுரையில் முதல்வர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அவர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.