சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை மத்திய தொழிற்படை போலீசார் தீவிர சோதனை செய்தபின் விமான நிலையத்தின் உள்ளே செல்ல அனுமதிப்பார்கள். இந்நிலையில் அங்கு உள்நாட்டு முனையத்தில் உள்ள புறப்பாடு 2-வது நுழைவு வாயில் அருகே பயணிகள் உடைமைகளை ஏற்றிச்செல்லும் டிராலி ஒன்று இருந்தது. அதில் தேங்காய் போன்ற பொருள் ஒன்று கேட்பாரற்று கிடந்தது.

இதனால் அது வெடிப்பொருளாக  இருக்குமோ? என அச்சமடைந்த பயணிகள் இது பற்றி மத்திய தொழிற்பாதுகாப்பு படையினருக்கு கூறினர். உடனே அங்கு விரைந்து சென்ற அவர்கள் அந்த பொருளை சோதித்த போது, அது வெடிகுண்டு இல்லை என்பது தெரியவந்தது. விமானத்தில் தேங்காய் போன்ற பொருட்களை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பயணி ஒருவர் தேங்காயை டிராலியில் போட்டு சென்றுள்ளதாக தெரிகிறது. இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.