
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. சென்னை வரலாற்றில் 2015-ஆம் ஆண்டு வந்த பெருவெள்ளம் மிகப்பெரிய பேரழிவாகும். அந்த ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி டிசம்பர் 2-ஆம் தேதி வரை தொடர் மழை பெய்தது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி முன்னெச்சரிக்கை இல்லாமல் திறந்து விடப்பட்டதால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வெள்ளத்தில் மூழ்கியது.
பல கட்டடங்கள் இரண்டு, மூன்றாவது தளம் வரை தண்ணீர் மட்டம் உயர்ந்து லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் மின்சாரம், தொலைதொடர்பு சேவைகள், இணையதள இணைப்பு போன்றவை ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை பாதிக்கப்பட்டது. சென்னையில் ரயில் சேவைகள் டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டு விமான சேவையும் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டது.
அத்தியாவசிய பொருட்களின் விலை 10 மடங்கு அதிகரித்தது. 2015-ஆம் ஆண்டு பெரு வெள்ளத்தில் 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. நீரில் மூழ்கி பல்லாயிரம் கோடி மதிப்பிலான இழப்பை சென்னை மக்கள் சந்தித்தனர். இதே போலவே மிக்ஜாம் புயலால் சென்னை உள்பட நான்கு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர்.
முக்கிய ஆறுகளான கூவம், கொசஸ்தலை ஆறு, அடையாறு ஆகியவற்றில் வெள்ளம் ஏற்பட்டு வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது. பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது. சென்னை பன்னாட்டு விமான நிலையத்தின் ஓடுபாதைகளில் தண்ணீர் சூழ்ந்ததால் டிசம்பர் நான்காம் தேதி முதல் ஐந்தாம் தேதி காலை வரை விமான சேவை நிறுத்தப்பட்டது. வேளச்சேரியில் சாலையில் டிசம்பர் நான்காம் தேதி பள்ளம் ஏற்பட்டு எரிபொருள் நிறுவன பகுதிகளில் ஒரு புதிய கட்டுமான கட்டிடம் பள்ளத்தில் சிக்கியது.
இதில் கட்டுமான தொழிலாளர்கள் 4 பேர் உட்பட ஐந்து பேர் சிக்கிவிட்டனர். ஒருவர் மட்டும் சடலமாக மீட்கப்பட்டார். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த முறை செம்பரம்பாக்கம் ஏரியை கண்காணித்து அதிகாரிகள் சரியான நேரத்தில் தண்ணீரை அவ்வபோது திறந்து விட்டனர். மிக்ஜாம் சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்து, வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வீடியோவும் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.