சென்னை மாநகராட்சியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அ.தி.மு.க. ஆட்சியின்போது அடிக்கல் நாட்டப்பட்டது. இதன்பின் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் பேருந்து கட்டுமான பணிக்காக இடம் தேர்வு செய்யப்பட்டது. மேலும் இதற்காக ரூ.393.74 கோடி பணம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்த வந்த நிலையில், கொரோனா காரணமாக கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

இதனையடுத்து கடந்த சில மாதங்களாக கட்டுமான பணிகள் வேகமாக  நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து, கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வண்டலூர் புறநகர் ரெயில் நிலையம் செல்வதற்கு வசதியாக ‘ஸ்கைவாக்’ பாலம் அமைக்கவும் ஆலோசனை நடந்து வருகிறது. இந்நிலையில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் தற்போது 98 சதவீதம் முடிவடைந்துள்ளது.

ஆனால் வண்ணப்பூச்சு, அலங்கார வேலை, மின்சார வசதி, குடிநீர் வசதி போன்ற சில பணிகள் மட்டுமே  முடியாமல் உள்ளது. எனவே இன்னும் 2 வாரத்துக்குள் இந்த பணிகளை முடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆகவே பேருந்து நிலையத்தை அடுத்த மாதம் (பிப்ரவரி) 15- ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின்  திறக்க உள்ளதாகவும்  கூறியுள்ளனர். இந்நிலையில் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளையும்  அதிகாரிகள் முழு வீச்சில் செய்து வருகின்றனர்.