கரீபியன் பிரீமியர் லீக்-2023ல் இம்ரான் தாஹிர் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் சாம்பியன் ஆனது.

கயானாவில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அமேசான் வாரியர்ஸ் முதல் முறையாக சிபிஎல் பட்டத்தை வென்றது. இந்தப் போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட் செய்த கெய்ரன் பொல்லார்ட் தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் 18.1 ஓவரில் 94 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் கீசி கார்டி (38) தவிர அனைத்து நைட்ரைடர்ஸ் பேட்டர்களும் சொற்ப ரன்களில் பரிதாபமாக தோல்வியடைந்தனர். துவக்க வீரர்களான சாட்விக் வால்டன் 10 ரன்களும், மார்க் டெயால் 16 ரன்களும் எடுத்தனர்.  மேலும் நிகோலஸ் பூரான் (1), பொல்லார்ட் (0), ஆண்ட்ரே ரஸ்ஸல் (3), பிராவோ (8) போன்ற முக்கிய நட்சத்திர வீரர்கள் ஏமாற்றினர்.

கயானா பந்துவீச்சாளர்களில், தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் டுவைன் பிரிட்டோரியஸ்  4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.. மேலும் குடாகேஷ் மோதி மற்றும் இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்னர் 95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற குறுகிய இலக்குடன் களம் இறங்கிய கயானா ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. 14 ஓவரில் 99 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

கயானா வீரர்களில் தொடக்க ஆட்டக்காரர் சைம் அயூப் (52), ஹோப் (32) ஆட்டமிழக்காமல்வெற்றி பெற வைத்தனர். மேலும் துவக்க வீரர் கீமோ பால் 11 ரன்கள் எடுத்தார். ஆட்ட நாயகனாக டுவைன் பிரிட்டோரியஸ்தேர்வானார். ஷாய் ஹோப் தொடரின் ஆட்டநாயகன் விருது பெற்றார். சாம்பியன் பட்டம் வென்ற மகிழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்ட இம்ரான் தாஹிர் கண்கலங்கி அழுதார். இம்ரான் தாஹிர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடியுள்ளது குறிப்பிடத்தக்கது.