இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் சாதனை படைத்துள்ளார். 100 மகளிர் டி20 போட்டிகளில் கேப்டனாகிய முதல் இந்தியர் என்ற பெருமையை ஹர்மன்பிரீத் கவுர் பெற்றார்..

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இன்று ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வழிநடத்த களம் இறங்கியதன் மூலம் சரித்திரம் படைத்தார். இந்திய அணிக்காக இதுவரை எந்த பெண் கேப்டனாலும் செய்ய முடியாத சாதனையை ஹர்மன்பிரீத் கவுர் செய்துள்ளார்.

இந்திய பெண்கள் அணி இதற்கு முன்பு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 2 போட்டிகளில் விளையாடியது, அதில் அவர் கேப்டனாக இல்லை, ஏனெனில் அவர் ஐசிசியால் இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. ஆனால் இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் விளையாடி புதிய சாதனை படைத்தார்.

ஹர்மன்பிரீத் கவுர் தற்போது 100 சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தியுள்ளார். இதுவரை 100 டி20 சர்வதேசப் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த 2 பெண் கேப்டன்கள் மட்டுமே உலகில் உள்ளனர். இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் மெக் லானிங் மட்டுமே இந்த சாதனையை செய்ய முடிந்தது.

ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில் 2012 முதல் 2023 வரையில் 100 டி20 போட்டிகளில் 56ல் வெற்றியும், 38ல் தோல்வியும் பெற்றுள்ளார். மெக் லானிங் பற்றி பேசினால், 2014 முதல் 2023 வரையில் 100 டி20 சர்வதேச போட்டிகளில் 76ல் வெற்றியும், 18ல் தோல்வியும் பெற்றுள்ளார். ஆண்கள் கிரிக்கெட்டில் இதுவரை 100 டி20 போட்டிகளுக்கு யாரும் தனது அணியை வழிநடத்தியதில்லை.

2023 மகளிர் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் லானிங் இந்த சாதனையை எட்டினார். அதன் பிறகு லானிங் எந்த டி20 போட்டியிலும் விளையாடவில்லை. எனவே ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாக விளையாடிய அதிக டி20 போட்டிகளுக்கான உலக சாதனையை விரைவில் உருவாக்க முடியும். இன்னும் ஒரு டி20 போட்டிக்கு இந்திய அணியை வழிநடத்தினால் சாதனை படைப்பார்

ஏற்கனவே ஹர்மன்பிரீத் கவுர் டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக முறை கேப்டனாக இருந்து சாதனை படைத்துள்ளார். அவர் விராட் கோலி, ரோகித் சர்மா, எம் எஸ் தோனி போன்ற முக்கிய நட்சத்திர வீரர்களை பின்னுக்கு தள்ளி ஏற்கனவே சாதனை படைத்த நிலையில், தற்போது ஹர்மன்பிரீத் கவுர் 100 டி20 போட்டிகளில் கேப்டனாக தேசிய அணியை வழி நடத்திய முதல் இந்தியர் என்ற வரலாற்றை படைத்துள்ளார்.

 டி20 போட்டிகளில் அதிகமுறை கேப்டனாக இந்தியர்கள் :

ஹர்மன் பிரீத் கவுர் –  100

எம் எஸ் தோனி – 72

ரோஹித் சர்மா – 51

விராட் கோலி – 50

மிதாலி ராஜ் – 32

ஒட்டு மொத்தமாக ஆண்கள் கிரிக்கெட்டில் மட்டும் ஆரோன் பின்ச் 76 டி20ஐ போட்டிகளுக்கு ஆஸ்திரேலியா அணியை வழிநடத்தியுள்ளார்.

அதிகமுறை டி20 போட்டிகளுக்கு கேப்டன்கள் (ஆண்கள் கிரிக்கெட்)

ஆரோன் பின்ச் – 76

எம் எஸ் தோனி – 72

இயான் மோர்கன் – 72

பாபர் அசாம் – 71

கேன் வில்லியம்சன் – 69

இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் :

ஆசிய விளையாட்டுப் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு இந்திய மகளிர் அணி நேரடியாகத் தகுதி பெற்றது. முதல் போட்டி மலேசியாவை எதிர்கொள்ளத் திட்டமிடப்பட்டது, ஆனால் மழை காரணமாக போட்டியை முடிக்க முடியாமல் ஐசிசி தரவரிசையின் அடிப்படையில் அந்த அணி நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது.பின்னர் அவர்கள் அரையிறுதியில் வங்கதேசத்தை எதிர்கொண்டனர், அங்கு இந்தியா அவர்களை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இன்று இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்தியா 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் ஆசிய விளையாட்டுப் பெண்கள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா (45 பந்துகளில் 46 ரன்கள் – 4 பவுண்டரி, 1 சிக்சர்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (40 பந்துகளில் 42 ரன்) சிறப்பாக செயல்பட்டனர். ஷபாலி வர்மா (9 ரன்கள்), ஹர்மன் ப்ரீத் கவுர் (2 ரன்கள்), ரிச்சா கோஷ் (9 ரன்கள்) ஏமாற்றம் அளித்தனர்.  டீம் இந்தியா பெரிய ஸ்கோரை எடுக்கவில்லை. இலங்கை பந்துவீச்சாளர்களில் இனோகா, சுகந்திகா மற்றும் பிரபோதனி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து இரண்டாவது பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 97 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹசினிபெரேரா 25 ரன்களும், நிலாக்ஷி டி செல்வா 23 ரன்களும் எடுத்தனர்
இந்திய அணியில் டைட்டஸ் சாது 3 விக்கெட்டுகளும் ராஜேஸ்வரி 2 விக்கெட்களும் எடுத்தனர்.