டி20 கிரிக்கெட் இறுதி போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வெல்வதற்கான இலங்கைக்கு எதிரான இறுதி போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்து,  நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா (45 பந்துகளில் 46 ரன்; 4 பவுண்டரி, 1 சிக்சர்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (40 பந்துகளில் 42 ரன்) சிறப்பாக செயல்பட்டனர். ஷபாலி வர்மா (9 ரன்கள்), ஹர்மன் ப்ரீத் கவுர் (2 ரன்கள்), ரிச்சா கோஷ் (9 ரன்கள்) ஏமாற்றம் அளித்தனர்.   டீம் இந்தியா பெரிய ஸ்கோரை எடுக்கவில்லை. இலங்கை பந்துவீச்சாளர்களில் இனோகா, சுகந்திகா மற்றும் பிரபோதனி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி தமது பலத்தை வெளிப்படுத்தினர்.

இதையடுத்து இரண்டாவது பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 97 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹசினிபெரேரா 25 ரன்களும், நிலாக்ஷி டி செல்வா 23 ரன்களும் எடுத்தனர்
இந்திய அணியில் டைட்டஸ் சாது 3 விக்கெட்டுகளும் ராஜேஸ்வரி 2 விக்கெட்களும் எடுத்தனர். இதனால் 19 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது இதன் மூலம் இந்திய அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது.