
கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி கோயம்பேடு தேர்தல் ஆணையத்தில் இருந்து அவரது நினைவிடத்திற்கு பேரணியாக செல்ல காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா தலைமையில் தடையை மீறி பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்ற பிரேமலதா விளக்கேற்றி மரியாதை செலுத்தினார்.
அவரைத் தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு, ஓ.பன்னீர் செல்வம், சீமான் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்நிலையில் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்தார். அதில் விஜயகாந்த் நினைவு தின பேரணிக்கு அனுமதி மறுக்க பட்டதை பெரிதாக்க வேண்டாம் என்று கூறினார். மேலும் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும் அமைதியான முறையில் பேரணி நடைபெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கூறினார்.