
பிரபல சுகாதார நிபுணர் மருத்துவர் எரிக் பெர்க் தனது யூடியூப் வீடியோவில், அதிகாலை 2-3 மணிக்கு தொடர்ந்து எழும்பும் வழக்கம் இருப்பவர்களுக்கு, இது உடல்நலக் குறைபாட்டுக்கான ஒரு எச்சரிக்கை என எடுத்து கூறியுள்ளார். எரிக் பெர்கின் கூற்றுப்படி, கார்டிசோல் என்ற மன அழுத்த ஹார்மோன் மிகக் குறைந்த அளவில் இருக்க வேண்டிய நேரம் அதிகாலை 2 மணி, ஆனால் சிலருக்கு இது திடீரென உயரும். இதனால், தூக்கமின்மை, தினசரி நடவடிக்கைகள் பாதிக்கப்படுதல் போன்ற பிரச்சினைகள் உருவாகலாம்.
மருத்துவர் பெர்க் தனது அனுபவத்தையும், மருத்துவ அறிவையும் பகிர்ந்து கூறுகையில், மெக்னீசியம் குறைபாடு கார்டிசோல் நிலைமாற்றத்துக்கான முக்கிய காரணங்களில் ஒன்று என கூறியுள்ளார். மெக்னீசியம், மன அழுத்தத்தைக் குறைத்து தூக்கத்தை மேம்படுத்தும் முக்கிய ஊட்டச்சத்து எனவும், இது தசை நரம்புகளை தளர்த்துவதிலும் பங்கு வகிக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், உடலில் மெக்னீசியம் அளவு குறைந்தால், தசை வலிப்பு, கை கால் இறுக்கம், தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இதற்காக, Magnesium Glycinate என்ற வகையான மெக்னீசியம் உட்கொள்வதை அவர் பரிந்துரைத்துள்ளார்.
அதிகாலை 6 மணிக்கு, உடலில் மெக்னீசியம் அளவு மிகக் குறைந்த நிலையில் இருக்கும், இதனால் இதய நோய், பக்கவாதம், மற்றும் ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம் போன்ற உடல்நல பிரச்சினைகள் அதிகம் காணப்படுகின்றன. இதை சமாளிக்க, மெக்னீசியத்தை இரவு தூங்கும் முன் எடுத்துக்கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்துகிறார். ஆனால், மெக்னீசியம்-கார்டிசோல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கலவையான முடிவுகள் வந்துள்ளதால், இதை பற்றிய கூடுதல் ஆராய்ச்சி தேவையென மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், தூக்க பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ ஆலோசனை பெற்ற பின்னரே மெக்னீசியம் எடுத்துக்கொள்ள வேண்டும் என எரிக் பெர்க் வலியுறுத்தியுள்ளார்.