அதிமுக கட்சியின் நிரந்தர பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி ஆகிவிட்டார். இருப்பினும் ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவுக்கான சட்ட போராட்டங்களை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார். ஆனால் ஓபிஎஸ் அதிமுகவில் மீண்டும் இணைவது கடினம் என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது. ஓபிஎஸ் டெல்லி பாஜகவை நம்பி தான் தனி அணியாக நின்றார். ஆனால் தற்போது உள்துறை அமைச்சர் அதிமுகவுடன் கூட்டணி தொடரப்படும் என்று அறிவித்ததோடு எடப்பாடி பழனிச்சாமியிடம் விரைவில் அதிமுகவில் இருக்கும் பிரச்சினைகளை முடிக்குமாறு சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தற்போது ஓபிஎஸ் தரப்புக்கு பேரடியாக வந்து விழுந்துள்ளது.

ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்று போராடுவதை விட சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் சேர்ந்து பிரிக்க முடியாத கூட்டணி அமைத்து தென் மாவட்டங்களில் தன்னுடைய பலத்தை நிரூபித்து காட்ட வேண்டும். அதுமட்டுமின்றி 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் தன்னை யார் என்று நிரூபித்தால் மீண்டும் அவருக்கு அரசியலில் ஒளிரும் எதிர்காலம் இருக்கிறது என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது. ஓபிஎஸ் சட்ட போராட்டம் தோல்வியடைந்தாலும் இறுதியில் மக்கள் தீர்ப்பு என்ற ஒன்று இருப்பதால் நாடாளுமன்ற தேர்தலில் வென்று காட்டுவது தான் புத்திசாலித்தனம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். மேலும் இந்த விஷயத்தில் ஓபிஎஸ் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.