மகாராஷ்டிரத்தின் ஔரங்கபாத் மற்றும் உஸ்மானாபாத் ஆகிய இரண்டு நகரங்களின் பெயரை சத்ரபதி, சம்பாஜி நகர் மற்றும் தாராஷிவ் என மாற்றும் மாநில அரசின் முடிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் பெயர் மாற்றத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதற்கு மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துள்ளார். முகலாய மன்னன் அவுரங்கசீப் நினைவாக அவுரங்காபாத் என்ற பெயரும், ஹைதராபாதை  ஆட்சி செய்த மன்னன் நினைவாக உஸ்மானாபாத் என்ற பெயரும் செயல்பாட்டில் இருந்து வந்தது. இந்நிலையில் படையெடுத்து வந்த முகலாய மன்னர்களின் பெயரை மாற்றி மண்ணின் ஆட்சியாளர்கள் பெயரை சூட்ட பல்வேறு வலதுசாரி அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது.

அதனை தொடர்ந்து சிவசேனை கட்சி பிளவுக்கு முன்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணி ஆட்சியின் அமைச்சரவை கூட்டத்தில் இரண்டு நகரங்களின் பெயர்களையும் மாற்ற மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் மத்திய அரசின் ஒப்புதல் பெறுவதற்கு முன்பாக கட்சி பிளவு ஏற்பட்டு ஆட்சி கலைந்ததையடுத்து புதிதாக பொறுப்பேற்ற ஏக்நாத் ஷின்டேயின் அமைச்சரவையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அவுரங்காபாத் நகருக்கு சத்ரபதி சிவாஜியின் மூத்த மகன் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் நினைவாக சத்ரபதி சம்பாஜி நகர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் மற்றொரு நகரமான உஸ்மானாபாத்துக்கு அந்த பகுதியில் இருக்கும் குகைகளின் பெயரான தாராஷிவ் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. மத்திய அரசு இந்த விவகாரத்தில் ஓராண்டுக்கும் மேலாக மௌனம் காத்திருந்த நிலையில் தற்போது பெயர் மாற்றத்தில் தங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என மகாராஷ்டிர மாநில பொது நிர்வாக துறை இணைச் செயலாளருக்கு வெள்ளிக்கிழமை கடிதம் அனுப்பி உள்ளது. அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நன்றி தெரிவித்துள்ள மாநில துணை முதல்வர் தேவேந்திரபட்னவீஸ், ஏக்நாத் ஷின்டே தலைமையிலான மாநில அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் நகரங்களின் பெயர் மாற்றத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஔரங்கபாத் எம் பி இம்தியாஸ் ஜலீல் கூறியதாவது, எங்கள் நகரத்தின் பெயர் எப்போதும் ஔரங்கபாத் என்றே இருந்தது. இனியும் அப்படியே இருக்கும் நகரத்தின் பெயரை வைத்து அரசியல் செய்யும் பாஜகவை மக்கள் தோற்கடிக்க வேண்டும். பெயர் மாற்றத்தை எதிர்த்து நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என கூறியுள்ளார்.