உத்தரப்பிரதேசத்தில் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நரங்க்பூர் கிராமத்தில், வரதட்சணை கேட்டு கணவனும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து மனைவியை உயிருடன் எரித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. பருள், ஐகவுனா கிராமப்புற சுகாதார மையத்தில் பணிபுரியும் பயிற்சி பெற்ற செவிலியர்.

கடுமையான தீக்காயங்களால் அவர் தற்போது டெல்லியில் உள்ள மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட கணவன் தேவேந்திரா, உத்தரப் பிரதேச காவல்துறையில் தலைமைக் காவலராக பணிபுரிபவர், தற்போது கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால், அவரது குடும்பத்தினர் தலைமறைவாக உள்ளனர்.

பருளின் தாயார் அனிதா, அக்கம் பக்கத்தினர் மூலம் இந்த கொடூரத்தை அறிந்து, மகள் தீயில் கருகி வலியால் துடிப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பருள் 13 ஆண்டுகளுக்கு முன் தேவேந்திராவை திருமணம் செய்தவர், இரட்டை குழந்தைகளுக்கு தாய். இந்த கொடுமைக்கு எதிராக பருளின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில், தேவேந்திரா, அவரது மாமியார், மைத்துனர் மற்றும் மூன்று ஆண் உறவினர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன், உத்தரப் பிரதேசத்தில் நிக்கி பாட்டி என்ற பெண்ணும் வரதட்சணை கேட்டு கணவனால் எரிக்கப்பட்ட சம்பவம் நடந்தது. அவரது குடும்பத்தினர் ஸ்கார்பியோ கார், பைக், தங்க நகைகள் கொடுத்தும், 36 லட்சம் ரூபாய் மற்றும் சொகுசு கார் கேட்டு கொடுமைப்படுத்தி, இறுதியில் எரித்தனர். இந்த இரு சம்பவங்களும் வரதட்சணை கொடுமையின் கொடூர முகத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளன.