கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் 12, 329 வாக்குகள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து அந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வேத ரத்தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தொகுதியில் 60 கோடி ரூபாய் அளவிற்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாகவும்,  இருவேறு சமூகங்களுக்கு இடையே விரோதத்தை தூண்டி விட்டதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.

அது மட்டுமல்லாமல் வேதாரண்யம் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை சுமார் 7000 பேருக்கு பட்டா வழங்கப்படும் என்ற ஒரு பொய்யை சொல்லி அவர் வெற்றி பெற்றதாகும் அந்த மனுவில்  தெரிவித்திருந்தார். ஆனால் இந்த வாதம் ஓ.எஸ் மணியன் தரப்பில் மறுக்கப்பட்டது. இது ஆதாரம் அற்ற புகார் எனவும், பணப்பட்டுவாடா நடந்திருந்தால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்கும் என்றும் ,

அரசியல் பழி வாங்கக்கூடிய நோக்கில் ஆதாரம் அற்ற குற்றச்சாட்டுகளை ஏற்காமல் இந்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஓஎஸ் மணியன் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி தண்டபாணி முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியனுக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து,  அவரது  வெற்றி செல்லும் என்று தீர்ப்பளித்து இருக்கிறார்.