தமிழக வெற்றிக்கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரையில் பிரமாண்டமான ஏற்பாடுகளுடன் தொடங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடந்த முதல் மாநாட்டின் வெற்றியைத் தொடர்ந்து, இந்த மாநாடு மாநிலம் முழுவதும் கட்சி செயற்பாட்டுக்கு மேலும் வலு சேர்க்கும் நோக்கில் நடத்தப்பட்டது. பல லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளது சிறப்பாகும். அரசியல் பரப்பளவிலும், பொதுமக்கள் கவனத்திலும் இந்த மாநாடு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேடையேறிய விஜய், தன்னுடைய உரையில், “தவெகவை நம்பி வருபவர்களுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் உறுதியான பங்கீடு உண்டு” என வலியுறுத்தினார். 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் முதல் முயற்சியில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
சமீபத்தில் நடந்த செயற்குழு கூட்டத்தில், விஜயே முதல்வர் வேட்பாளராகும் என்றும், கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்றும் தீர்மானிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜயின் பெற்றோர்களும் நிகழ்வில் கலந்துகொண்டதுடன், மதுரை மாநாடு 2026 அரசியல் மாற்றத்திற்கு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
