திருப்பூர் மாவட்டம் அவினாசியில் புதுப்பெண் ரிதன்யா என்பவர் வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தொழிலதிபர் அண்ணாதுரை என்பவரது மகள் ரிதன்யாவுக்கும் (27) அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பவரது மகன் கவின் குமார் ‌(27) என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில் கடந்த 28ஆம் தேதி ரிதன்யா காரில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தன்னுடைய மரணத்திற்கு மாமனார் மாமியார் மற்றும் கணவன் ஆகியோர்தான் காரணம் என அழுதபடியே ஆடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் கவின் குமார் மற்றும் ஈஸ்வரமூர்த்தி இருவரின் ஜாமீன் மனு சமீபத்தில் விசாரணைக்கு வந்த போது நீதிமன்றம் அவர்களது ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்தது.

இதைத் தொடர்ந்து சித்ரா தேவியும் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் திருப்பூர் நீதிமன்றம் இந்த விசாரணையை வருகிற 11ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. மேலும் ஜாமீன் வழங்கக் கூடாது என ரிதன்யாவின் தந்தை சார்பில் இடைக்கால மனு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.