தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு ரேஷன் கடைகளில் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படும். அதோடு ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் வழங்கப்படும். அந்த வகையில் இந்த வருடமும் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு போன்றவைகள் வழங்கப்படும் நிலையில் இன்று முதல் டோக்கன் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. வீடு வீடாக சென்று கடை ஊழியர்கள் டோக்கன் வழங்கிய நிலையில் வாங்க தவறியவர்கள் ரேஷன் கடைகள் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்.

ஜனவரி 9-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு விநியோகம் செய்யப்பட உள்ளது. ஆனால் இந்த வருடம் ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் இல்லாதது பொதுமக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியிலும் சமீபத்தில் ரேஷன் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் பொதுமக்களுக்கு அத்தியாவசியமான பொருள்கள், மலிவு விலையில் வழங்கப்பட்ட வருகிறது. தற்போது புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது புதுச்சேரி மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகப்புக்கு பதிலாக 750 ரூபாய் ரொக்க பணம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த அறிவிப்பு புதுச்சேரி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.