பிரபல திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ், நடிகர் தனுஷுக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி, 20 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்கக் கோரி இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு, தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ‘நான் ருத்ரன்’ என்ற படத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் அந்தப் படத்திற்குப் பதிலாக, மற்றொரு படத்தை இயக்கி, நடித்துத் தருவதாக தனுஷ் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனை ஏற்றுக்கொண்ட தயாரிப்பு நிறுவனம், தனுஷ் இயக்கி நடித்த அந்தப் படத்திற்காக தனுஷ், நாகார்ஜுனா, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்களுக்கு முன்பணம் மற்றும் இதர தயாரிப்புச் செலவுகளுக்காக சுமார் 20 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளது.

இந்நிலையில், தனுஷ் தரப்பிலிருந்து முழுமையான திரைக்கதை வழங்கப்படவில்லை என்றும், சொன்னபடி கால்ஷீட் ஒதுக்காமல் மற்ற படங்களுக்கு முன்னுரிமை அளித்ததாகவும் தயாரிப்பு நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் அந்தத் திரைப்படம் பாதியிலேயே முடங்கியுள்ளது.

இது தொடர்பாக தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் வழக்கறிஞர் ஏ.சிதம்பரம் அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது,  2025-ஆம் ஆண்டு இறுதியில் கால்ஷீட் தருவதாக அளித்த வாக்குறுதியை தனுஷ் நிறைவேற்ற வேண்டும். இது குறித்த தனது இறுதி முடிவை தனுஷ் விரைவில் தெரிவிக்க வேண்டும்.

தவறும்பட்சத்தில், தயாரிப்பு தரப்பு மேற்கொண்ட 20 கோடி ரூபாய் செலவை ஈடுகட்ட வேண்டும். அத்துடன் கூடுதலாக ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

இவற்றிற்கு உடன்படாவிட்டால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த நோட்டீஸில் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நோட்டீஸ் விவகாரம் தற்போது கோலிவுட் திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.