‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வீர ராஜா வீரா’ பாடல் தொடர்பான காப்புரிமை வழக்கில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இந்துஸ்தானி இசைக் கலைஞர் உஸ்தாத் ஃபயாஸ் வாசிஃபுதீன் தாகர் என்பவர், தனது தந்தை மற்றும் மாமா உருவாக்கிய ‘சிவ ஸ்துதி’ என்ற பாடலின் மெட்டை அனுமதியின்றி ரகுமான் பயன்படுத்தியதாகத் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ரகுமானை ரூ. 2 கோடியை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக டெல்லி உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு ரகுமானுக்கு ஆதரவாக வழங்கிய இடைக்காலத் தடையை நீக்கி, பழைய உத்தரவை உச்ச நீதிமன்றம் மீண்டும் அமலுக்குக் கொண்டு வந்துள்ளது.
மேலும், இது வெறும் சட்டப் போராட்டம் மட்டுமல்ல என்றும், பாரம்பரிய செவ்வியல் இசைக் கலைஞர்களின் உழைப்புக்கும் அவர்களின் ‘தாகர்வானி’ இசை மரபுக்கும் உரிய மரியாதையும் அங்கீகாரமும் வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
‘வீர ராஜா வீரா’ பாடலில் தாகர் சகோதரர்களின் பங்களிப்பைச் சுட்டிக்காட்டும் வகையில் வரிகள் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதா என்பது குறித்தும் ரகுமான் தரப்பிடம் நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.
