
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி இதுவரை உயிரிழந்தவர்களின் 57 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 33, சேலம் மருத்துவமனையில் 17, விழுப்புரம் மருத்துவமனையில் 4, ஜிப்மர் மருத்துவமனையில் மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து 100க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் இதுவரை விஷ சாராயம் விற்றவர்கள் உட்பட 8 பேரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் இதில் மேலும் ஒரு முக்கிய சாராய வியாபாரியான செந்தில் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.