மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே 17 வயது சிறுவனை ஜாதி பெயரைச் சொல்லி சிலர் அடித்து கொடுமைப்படுத்தியதோடு சிறுவன் மீது சிறுநீர் கழித்து 6 வயது சிறுவன் காலில் விழ வைத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு நீலம் பண்பாட்டு மையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதாவது அந்த ஊரில் புரட்டாசி மாசம் நடந்த ஒரு கோவில் திருவிழாவின் போது சிறுவன் வேட்டி கட்டி நடனமாடியதாக கூறப்படுகிறது. அப்போது வேட்டியை மடித்து கட்டி நடனம் ஆடாதே என்று சிலர் கூறியதாகவும் அதனால் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் மாற்று சமுதாயத்தை சேர்ந்த கிஷோர் மற்றும் அவருடைய நண்பர்கள் சிறுவனை தாக்கியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த வாரம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறுவன் ஊருக்கு வந்த நிலையில் ஏற்கனவே தகராறு செய்த கிஷோர், உக்கிர பாண்டி, மணிமுத்து, நிதிஷ், சந்தோஷ், பிரம்மா ஆகியோர் சிறுவனை கடத்தி சென்று கொடூரமாக தாக்கி துன்புறுத்தியதோடு சிறுநீர் கழித்து அவமானப்படுத்தி 6 வயது சிறுவனின் காலில் விழ வைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புகார் கொடுக்கப்பட்ட நிலையில் வழக்கு பதிவு செய்யப்படாத தாக தகவல் வெளிவந்தது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தற்போது மதுரை மாவட்ட காவல்துறை விளக்கம் கொடுத்துள்ளது. அதில் சிறுவன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அது தொடர்பாக 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுவனை ஜாதி பெயரை சொல்லி திட்டியதோடு கால்களில் விழ வைத்ததாகத்தான் புகார் எழுந்துள்ளது. மேலும் மற்றபடி சிறுநீர் கழித்து அவமானப்படுத்தியதாக பரவும் தகவலில் உண்மை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது