கர்நாடக மாநிலம் பெங்களூரு நாகவாடா பகுதியைச் சேர்ந்த டேனியல் (49), மனைவி கலையரசி (38), மகன் ராகுல் (22) மற்றும் ராகுலின் நண்பர் பிரகாஷ் (34) ஆகியோர் நேற்று முன்தினம் வேளாங்கண்ணிக்கு பயணம் செய்திருந்தனர்.

இவர்களுடன் ராகுல் காதலித்து வந்த பெண்ணும் வந்திருந்ததாக கூறப்படுகிறது. வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் ராகுல் மற்றும் அந்த பெண்ணுக்கு நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது.

இதுகுறித்த தகவல் காதலி சார்ந்த உறவினர்களுக்கு தெரியவந்ததுடன், அவர்கள் நேற்று வேளாங்கண்ணி வந்தனர். அப்போது விடுதியில் தங்கியிருந்த ராகுல், அவரது பெற்றோர் மற்றும் நண்பர் ஆகிய நான்கு பேரையும் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்கூட்டியே மறைத்து வைத்திருந்த அரிவாளை பயன்படுத்தி அவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி, பின்னர் அந்தப் பெண்ணை தங்களுடன் அழைத்துச் சென்றனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த டேனியல், கலையரசி, ராகுல் மற்றும் பிரகாஷ் ஆகியோர் நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த நிலையில் தற்போது மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினரை வெட்டி சாய்த்த 9 பேரை பெங்களூருவில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.