பாஜகவின் முதல் பட்டியலில் இடம் பெற்ற அசன்சோல் மக்களவைத் தொகுதி வேட்பாளர் போட்டியிட மறுப்பு தெரிவித்துள்ளார்.

2024 மக்களவை தேர்தலுக்கான தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று மாலை வெளியிட்டது. 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதல் கட்டமாக 195 பேர் கொண்ட பட்டியல்வெளியானது. அதன்படி, நாடாளுமன்ற தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. 2014 மக்களவைத் தேர்தல் முதல் வாரணாசி தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார் பிரதமர் மோடி.

அதேபோல குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் மத்திய அமைச்சர் அமித்ஷா போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ அருணாச்சல பிரதேசம் மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். உத்தரபிரதேசத்தின் லக்னோ தொகுதியில் ராஜ்நாத் சிங் மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இப்படி 195 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்..

இதில் மேற்கு வங்கத்திற்கு 20 வேட்பாளர்கள் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  அதன்படி மேற்குவங்க மாநிலம் அசன்சோல் தொகுதி பாஜக வேட்பாளராக  பவன் சிங் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மேற்குவங்க மாநிலம் அசன்சோல் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பவன் சிங் போட்டியிட மறுப்பு தெரிவித்துள்ளார். போஜ் புரி மொழி பாடகரான பவன் சிங் சில காரணங்களால் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.