இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்ற நிலை காரணமாக, நாட்டின் வடக்கு பகுதிகளில் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எல்லை அருகே இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதலுக்கு பிந்தைய சூழ்நிலையைச் சுட்டிக்காட்டும் வகையில், ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் சேவைகளை தற்காலிகமாக ரத்து செய்துள்ளன.

ஏர் இந்தியா வெளியிட்ட அறிவிப்பில், ஜம்மு, ஸ்ரீநகர், லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், பூஜ், ஜாம்நகர், சண்டிகர் மற்றும் ராஜ்கோட் ஆகிய நகரங்களுக்கான விமானங்கள் இன்று நண்பகல் 12 மணி வரை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமிர்தசரஸுக்குச் செல்ல இருந்த இரண்டு சர்வதேச விமானங்கள் டெல்லிக்கு திருப்பி விடப்பட்டன. பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தர்மசாலா, ஜம்மு, ஸ்ரீநகர், லே மற்றும் அமிர்தசரஸ் விமான நிலையங்கள் “மறு அறிவிப்பு வரும் வரை” மூடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. விமானங்கள் தாமதமடையவோ அல்லது ரத்தாகவோ வாய்ப்புள்ளது என எச்சரிக்கையுடன் பயணிகள் முன்கூட்டியே விமான நிலையங்களை தொடர்பு கொண்டு தகவல்களை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும்  ஜம்மு காஷ்மீரில் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஜம்மு, சம்பா, கத்துவா, ரஜோரி மற்றும் பூஞ்ச் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.