தமிழ் சினிமாவில் திரௌபதி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. இந்த படத்திற்கு பிறகு பகாசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவர் சமீபகாலமாக மனதில் பட்ட கருத்துகளை பொதுவெளியில் கூறி வருகிறார். குறிப்பாக திருப்பதியில் லட்டு விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்த அவர் நடிகர் விஜய் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்காதற்கும் கண்டனங்களை தெரிவித்திருந்தார். இந்நிலையில் இயக்குனர் மோகன் ஜி தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பாஜக கட்சியின் மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆனால் அவர் எந்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார், எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்ற விவரங்கள் தெரியவில்லை எனவும் அஸ்வத்தாமன் கூறியுள்ளார். அவர் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்ற விவரங்களை குடும்பத்தினருக்கு தெரிவிக்கவில்லை எனவும், இது உச்ச நீதிமன்ற ஆணைக்கு எதிரானது என்றும் கூறியுள்ளார். மேலும் திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து எதிர் கருத்துக்கள் கூறுபவர்கள் இப்படி சட்டத்திற்கு புறம்பாக கைது செய்யப்படுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

மேலும் பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் மோகன் ஜி பேட்டி அளித்த நிலையில் அது தொடர்பாக தான் அவரை சென்னை காசிமேடு இல்லத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்ததாக கூறப்படுகிறது.