கர்நாடகா மாநிலம் தர்மஸ்தலாவில் கண்டெடுக்கப்பட்ட 100 எலும்புகள், மண்டை ஓடு மற்றும் முதுகுத் தண்டு கண்டுபிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகாவில் அமைந்துள்ள தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலில் பணியாற்றியதாக கூறப்படும் சாம்ராஜ்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரால் வெளியிடப்பட்ட அதிர்ச்சி புகாரில், அவர் கடந்த சில ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாகவும், அவர்களின் உடல்களை கோவிலின் சுற்றுப்புற வனப்பகுதியில் புதைத்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இந்த புகாரால் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சுவடு தேடி விசாரணையைத் தொடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு (SIT), கோவில் அருகே அமைந்துள்ள நேத்ராவதி ஆற்றங்கரையில் புகார்தாரர் குறிப்பிட்ட 35 இடங்களில் கடந்த வாரம் முதல் தடயவியல் குழுவுடன் இணைந்து அகழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் 6வது இடத்தில் சுமார் 15 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இவை தற்போது பெங்களூருவில் உள்ள ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.

இந்தநிலையில், நேற்று (ஆக. 4) 11வது இடத்தைக் சுற்றிய பகுதியில் மூன்று அடி தோண்டியபோது சேலையின் ஒரு பகுதி மற்றும் மனித எலும்புகள் மீட்கப்பட்டன. இது சம்பந்தமாக SIT குழுவினர் மீண்டும் கடும் பாதுகாப்புடன் பகுதியில் அகழ்வுப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். கண்டெடுக்கப்படும் அனைத்து எலும்புகளும் மருத்துவ பரிசோதனைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளன. புகாரின் உண்மைத் தன்மை மற்றும் சம்பந்தப்பட்ட மற்ற குற்றவாளிகளை கண்டறிவதற்காக விசாரணை தொடர்கிறது.