தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, ஆட்சி அமைப்பதில் பெரும் இழுபறி நீடித்து வரும் நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகியதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் ஸ்டாலினுக்கே வழங்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “தனிப்பட்ட முறையில் ஒரு வலுவான எதிர்க்கட்சியாகச் செயல்படவே நான் விரும்புகிறேன், ஆனால் தற்போதைய அரசியல் சூழலில் கட்சியின் நலன் கருதி சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது” என்று சூசகமாகத் தெரிவித்தார்.
மேலும், தமிழக மக்கள் இப்போது இன்னொரு தேர்தலைச் சந்திக்கத் தயாராக இல்லை என்றும், மாநிலத்தின் நலனுக்காக ஒரு நிலையான ஆட்சி அமைவதே தற்போதைய தேவை என்றும் அவர் ஆணித்தரமாகத் கூறினார்.
108 இடங்களில் வென்றுள்ள தவெக, பெரும்பான்மைக்கு இன்னும் 6 இடங்கள் தேவைப்படும் நிலையில், தவெக தரப்பும் ஆட்சி அமைக்க காய் நகர்த்தி வருவது தமிழக அரசியலில் பெரும் அனலைக் கிளப்பியுள்ளது.
ஸ்டாலினின் இந்த ‘முடிவு எடுக்கும் அதிகாரம்’ மற்றும் ‘நிலையான ஆட்சி’ குறித்த பேச்சு, திமுக அடுத்தகட்டமாக அதிரடி கூட்டணி மாற்றங்களில் ஈடுபடப்போகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
