நாடு முழுவதும் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்திய ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘தி கேரளா ஸ்டோரி 2’ வெளியீட்டிற்கு கேரள உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மத தீவிரமயமாக்கல் மற்றும் வகுப்புவாத கண்ணோட்டத்தில் கேரளா சித்தரிக்கப்படுவதாகக் கூறி, இந்தப் படத்திற்குத் தடை விதிக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. “இந்தப் படம் சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கக்கூடும்; சட்டம் – ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது” என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீகுமார் ஆஜராகி வாதிட்டார். அவர் முன்வைத்த முக்கிய வாதங்கள்: திரைப்படம் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாகத் தயாராக உள்ளது. வெளிநாட்டு விநியோக உரிமைகள் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டுவிட்டன. வெறும் 2 நிமிட டீசரை (Teaser) மட்டும் வைத்துக்கொண்டு படத்திற்குத் தடை கோர முடியாது. மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) சான்றிதழ் அளித்த பிறகு, நீதிமன்றம் அதில் தலையிட முடியாது என்றனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “அனைத்து தரப்பு நியாயங்களையும் விரிவாக ஆராய வேண்டியுள்ளது. அதுவரை படத்தின் வெளியீட்டை ஒத்திவைப்பதே சரியாக இருக்கும்” என்று குறிப்பிட்டார். மனுதாரர்களின் வாதங்களில் உள்ள முகாந்திரத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மனுக்கள் மீது இறுதி முடிவு எடுக்கப்படும் வரை ‘தி கேரளா ஸ்டோரி 2’ திரைப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிடக் கூடாது என்று தயாரிப்பாளர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும் இந்த உத்தரவு திரைப்படத் துறையிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
