மலையாளத் திரையுலகின் மிகச்சிறந்த நடிகர், இயக்குநர் மற்றும் புகழ்பெற்ற திரைக்கதை ஆசிரியரான ஸ்ரீனிவாசன் (69), உடல்நலக்குறைவு காரணமாக இன்று (டிசம்பர் 20, சனிக்கிழமை) காலமானார்.

கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலப் பாதிப்புகளால் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக மலையாளத் திரையுலகில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் முத்திரை பதித்த இவர், 225-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவரது ‘சந்தேசம்’, ‘நாடோடிக்காற்று’ உள்ளிட்ட பல திரைக்கதைகள் சமூக நையாண்டிக்குச் சிறந்த உதாரணங்களாகத் திகழ்கின்றன. சிறந்த படத்திற்கான தேசிய விருது மற்றும் கேரளா மாநில அரசின் பல விருதுகளைப் பெற்றுள்ள இவருக்கு, வினீத் ஸ்ரீனிவாசன் மற்றும் தியான் ஸ்ரீனிவாசன் என்ற இரு மகன்கள் உள்ளனர்; அவர்களும் திரையுலகில் முன்னணி நடிகர்களாகவும், இயக்குநர்களாகவும் விளங்குவது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவு மலையாள மற்றும் தென்னிந்தியத் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.