தமிழக முதல்வர் ஸ்டாலின் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு தற்போதே களப்பணிகளை தொடங்க வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் பிறகு சரிவர பணி செய்யாத மாவட்ட நிர்வாகிகள் உட்பட நிர்வாகிகள் மாற்றப்படுவார்கள் எனவும் பதவிகளை காப்பாற்ற சரிவர பொறுப்புகளை செய்வது அவசியம் எனவும் முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் மாவட்ட செயலாளர்கள் பலர் அதிரடியாக மாற்றப்பட்டனர். குறிப்பாக தர்மபுரியில் மாவட்ட செயலாளர்கள் அடுத்தடுத்து மாற்றப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தர்மபுரி திமுகவில் கலகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன் தற்போது தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகளை கூண்டோடு நீக்கியுள்ளார். அதன்படி மாவட்ட அயலக அணி அமைப்பாளர் சி. செந்தில் குமார், பொறியாளர் அணி அமைப்பாளர் சின்னசாமி, விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கே.பி வைத்தியலிங்கம் உள்ளிட்டோரை கட்சியிலிருந்து நீக்குவதாக துரைமுருகன் அறிவித்துள்ளார். மேலும் விரைவில் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.