நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளராகப் பணியாற்றிய பி.டி. செல்வகுமார் சமீபத்தில் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். இணைந்த சில நாட்களிலேயே நடிகர் விஜய் மற்றும் அவரது அரசியல் வருகை குறித்து பல்வேறு விமர்சனங்களை அவர் முன்வைத்துப் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், திமுக தலைமை அவருக்குக் கட்சியில் முக்கியப் பொறுப்பை வழங்கியுள்ளது.
அதன்படி, திமுக வர்த்தக அணியின் துணைச் செயலாளராக பி.டி. செல்வகுமார் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த சுப்புரத்தினம் என்பவருக்கும் திமுகவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுகவில் இணைந்த இவருக்கு, தற்போது திமுக செய்தித் தொடர்புத் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு இவ்வாறு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படுவது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது.
