தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று மக்கள் நலன் சார்ந்த மிக முக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு ஒன்றை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார். ஏழை மற்றும் நடுத்தர மக்களின் உயர்தர மருத்துவ சிகிச்சைகளுக்கான செலவினங்களை அரசே முழுமையாக ஏற்கும் நோக்கில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் நிதி வரம்பை ஒரே அடியாக ஐந்து மடங்கு உயர்த்தி அவர் சட்டப்பேரவையில் பேரவை விதி 110-ன் கீழ் முறைப்படி அறிவித்தார்.
சட்டப்பேரவையில் இந்த அறிவிப்பை வெளியிட்டு முதலமைச்சர் பேசுகையில், “பல்வேறு கடுமையான நோய்களுக்கான மருத்துவச் செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், ஏழை மக்கள் தங்களது உயிர்காக்கும் சிகிச்சைகளுக்காகக் கடனாளியாவதைத் தடுப்பதே அரசின் முதன்மை நோக்கமாகும். இதற்காக இதுவரை ஆண்டிற்கு ரூ.5 லட்சமாக இருந்த முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் தொகையின் உச்சவரம்பு, இனி ரூ.25 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டிருந்தார்.
இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து பேரவையில் இருந்த அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களும் (MLA-க்கள்) மேஜையைத் தட்டித் தமது பலத்த ஆதரவையும், நன்றியையும் பதிவு செய்தனர். சிக்கலான அறுவை சிகிச்சைகள், உறுப்பு மாற்று சிகிச்சைகள் மற்றும் புற்றுநோய் போன்ற பெருநோய்களுக்குத் தேவைப்படும் பெரும் தொகையை இக்காலகட்டத்தில் எளிய மக்கள் எளிதில் பெற இந்த ஐந்து மடங்கு உயர்வு பெரும் உறுதுணையாக இருக்கும் எனச் சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
ஒரே அடியாக காப்பீட்டுத் தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தியது பொதுமக்கள் மற்றும் ஏழை எளிய குடும்பங்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும், வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் தொடர்பாகத் தேவையான அனைத்து வழிகாட்டுதல்களுடனான அரசாணை விரைவில் அரசிடமிருந்து முறைப்படி வெளியிடப்பட்டு, உடனடியாக மாநிலம் முழுவதும் நடைமுறைக்கு வரும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் வரையில் முதல்வர் விஜய் உயர்த்திய நிலையில் அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் தொகுதி பணிகளை ஆய்வு செய்ய எனேதுவாக கார் வழங்கப்படும் எனவும் அதனை பராமரிக்க மாதம் ரூ.75,000 வழங்கப்பட வேண்டும் அறிவித்தார்.
