திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் என்ற கிராமத்தில் வித்யா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இந்த பெண் கடந்த 30-ம் தேதி தன்னுடைய வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென தலையில் பீரோ விழுந்துள்ளது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் வித்யாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர். பின்னர் போலீசாருக்கு தகவல் எதுவும் கொடுக்காமல் உறவினர்கள் அந்த பெண்ணை அடக்கம் செய்து விட்டனர். இந்நிலையில் வித்யா வெண்மணி என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார்.அந்த வாலிபர் வித்யாவை பெண் கேட்டு சென்ற நிலையில் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வித்தியாவின் பெற்றோர் பெண் கொடுக்க மறுப்பு தெரிவித்து விட்டனர்.

இது தொடர்பாக அந்த பெண்ணின் வீட்டில் அடிக்கடி தகராறு நடந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மர்மமான முறையில் அவர் உயிரிழந்துள்ளார். வீட்டில் பிரச்சனை நடந்து கொண்டிருந்த நேரத்தில் காதலி பலியானதால் அவருடைய காதலனுக்கு சந்தேகம் ஏற்பட்டு தற்போது போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார்.அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த பெண்ணின் சடலத்தை தோண்டி பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட வித்யாவின் அண்ணன் சரவணன் தான் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. அதாவது வேறு சமூகத்தை சேர்ந்த வாலிபரை காதலித்ததால் கோபத்தில் தன்னுடைய தங்கையை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் தலையில் பீரோ விழுந்ததாக நாடகமாடி உடலை அவசரமாக அடக்கம் செய்துள்ளனர். மேலும் தற்போது சரவணனை கைது செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.