வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பெஞ்சல் புயலாக மாறியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு இன்று மற்றும் நாளை ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நாளை காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புயல் கரையை கடக்க இருக்கிறது.

இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. இந்நிலையில் மழை காரணமாக ஏற்கனவே கடலூர் மாவட்டத்திற்கு நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்த நிலையில் தற்போது விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கும் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து தற்போது காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று சென்னை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் நாளை பலத்த காற்றுடன் சூறாவளி காற்று வீசப்படும் என்பதால் கடலூர் மாவட்டம் மக்கள் யாரும் பிற்பகலில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்பிறகு திருவள்ளூர் உள்ளிட்ட  பகுதிகளுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். பெஞ்சல் புயல் நாளை கரையை கடக்கும் நிலையில் தமிழக அரசு புயலை எதிர்கொள்வதற்காக தயார் நிலையில் இருக்கிறது.